Sunday, February 22, 2015

ஜமுனாவும் சமகாலமும்

வணக்கம், மறுபடியும் நான் வந்துட்டேன்! :) இந்த முறை எழுத நிறைய இருக்கு..
2 புத்தகங்கள் படிச்சு முடிச்சாச்சு! இரண்டும் வெவ்வேறு விதமான புத்தகம்...
புத்தகங்கள் படிப்பது மட்டும் இல்லாமல் பல சுவாரசியமான விஷயமும் செய்தேன்.

எல்லாம் விவரமாக கீழே...

புத்தகங்கள் 

1.ஃபேஸ்புக் பொண்ணு - அதிஷா (வினோத்)
2.தண்ணீர் - அசோகமித்திரன் 

ஃபேஸ்புக் பொண்ணு

ம்ம்ம்ம் ஆமாங்க அதிஷா-தான் இந்தப் புத்தகம் படிக்க முதல் காரணம், இரண்டாவது காரணம் உமா, புதிய பரிதி இவர்கள் இந்த புத்தகம் பற்றிய கருத்தை ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டனர் அதை நான் படித்ததும்.,இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆவல் கூடியது..

புத்தக வெளியிட்டு விழாவிற்கு முன்பே இந்தப் புத்தகத்தை வாங்க முனைந்தேன் ஆனால் டிஸ்கவரி புக் பேலஸ்-ல் இருந்து ஜனவரி 27ஆம் தேதி தான் கிடைத்தது.அதற்க்கு முன் என்னிடம் அதே புத்தகத்தைக் கொண்டு வந்து சேர்த்த யது நந்தன் (அ) நவீன் -க்கு மிக்க நன்றி...

புத்தகத்தைப்  பற்றி
தலைப்பு – ஃபேஸ்புக் பொண்ணு
சிறுகதைகள்
எழுத்து – அதிஷா
பதிப்பகம்- உயிர்மை
முதல் பதிப்பு – டிசம்பர் 2014

முதல் புத்தகம் அதிஷாவிக்கு... என் வாழ்த்துக்கள்! பாஸ்கர் சக்தி முன்னுரை எழுதி இருக்கிறார், அவர் சொன்னது போல எளிய உரைநடை. 

அதிஷா மேல ஒரு பெரிய மதிப்பும் மரியாதையும் உண்டு அது ஏன்னு கேடிங்கன்னா அவர் எங்க ஊர் காரர்.. அது மட்டும் இல்ல அவரை எல்லோருக்கும் வலைதளம் (ப்ளாக்) வழியாகப் தான் பரிச்சயம், எனக்கும் அப்படியே...

இந்தத் தொகுப்பில் வரும் சில சிறுகதைகள், தன் வலைதளத்தில் முன்பு வந்தவை என்று குறிப்பிட்டு இருக்கிறார் அதிஷா... எல்லாச் சிறுகதையும் நம் கண் முன் நடப்பது போல ஓர் உள்ளுணர்வு, நகைச்சுவைக்குப் பஞ்சமில்லை.. கோயமுத்தூர் குசும்பு என்பது கொஞ்சம் எழுத்திலும் தெரிகிறது.

சிறுகதைகள்.., குட்டிஸ்கள் வளம் வரும் கதைகள் அனைத்தும் மனதை மிகவும் கவர்ந்தது...

சில பாத்திரம் மிகவும் பாதித்தது என்னை, சில பாத்திரம் நகைச்சுவை கொண்டு இருந்தாலும் அவை மூலமாக வந்து சேரும் கருத்து மிகவும் வலிமையானது என்றே சொல்லவேண்டும்.

என் தலைமுறையினர் இயல்பாகப் படிக்கக் கூடிய ஒரு புத்தகம், 

1. மரம்,செடி,மலை - அம்மு... இவளை போல நாம் எல்லோரும் 95-களில் இருந்து இருப்போம்!

2.வாராது வந்த வாசகன் - எனக்கு ரொம்போ புடிச்ச சிறுகதை,இதற்காக அதிஷாவிக்கு ஒரு அன்புத் தழுவுதல்.

3.உயிர்,மெய், அஃறினை - செல்லப்பிராணிகளைக் கொண்டு எழுதிய கதை அல்ல என்று தோன்றினாலும் அவை மீது உள்ள கரிசனம் கூடுகிறது நமக்கு இந்தச் சிறுகதை படித்து முடிக்கும் பொழுது.

4.பத்துபத்து - ம்ம்ம் கொஞ்சம் கஷ்டமா இருந்தது. 

5.யாக்கை - அவ்வளவு தாக்கம் இல்லை இந்தச் சிறுகதையால்,.. ஒரு வேலை நான் ஆணாக இருந்தால் தாக்கம் இருந்து இருக்கலாம்.

6.நீலக்கை - பாஸ்கர் சக்தி சொல்லியது போல மிகவும் தாக்கமுடைய ஒரு சிறுகதை. இந்தப் புத்தகத்தில் இருந்து என்றும் மறக்க முடியாத ஒரு சிறுகதை. இச்சுமி என்ற பெயர் ஒட்டிக்கொண்டது என்னுடன்.

7.சாமியார் மகிமை - அடுத்த சிக்ஸர், அதிஷா-வின் டச் என்று சொல்லும் அளவிற்கு மிகவும் ரசித்துப் படித்த ஒரு சிறுகதை.

8.ஃபேஸ்புக் பொண்ணு - அதிஷா சொன்ன கோச்சுக்க மாட்டீங்களே இது ஏதோ உங்களுக்கு நடந்த மாதிரி தோணுது :P 

9.ஓம்புயிர் - அலமேலு ரொம்போ பரிச்சயமான பெயர் இந்தக் கதையும் பிடித்தது.

10.விதியுடனொரு விளையாட்டு - ஹாஹா செம செம :P

11.தேன்மிட்டாய் - இன்னமும் இனிக்கத் தான் செய்யுது.

12.கெட்டவார்த்தை - அடுத்து வரும் தலைமுறைக்காக எழுதிய உன்னதமான  சிறுகதை போல தோன்றியது... உண்மை தான் உரக்க சொல்லாமல் சொல்லி இருக்கீங்க.

13.பாட்டுத்தலைவன் - உறுத்தலாக இருந்தது

14.மயில்றெக்க - பிடித்தது, உணர்ந்தது :)

15.ஈரீலை - ஒரு நெருடல், ஒரு புரிதலும்.

தண்ணீர்

அசோகமித்திரன் இவரைப் பற்றித் தெரிந்து கொள்ளவும், இவரின் புத்தகத்தைப் படிக்கக் காரணமாக இருந்ததும் ஒருவர்... அவர் தான் இவர், இவரின் குட் ரிட்ஸ் புத்தக பட்டியலில் பார்த்தது தான் இந்த புத்தகம்.

வளர் மிக்க நன்றி இந்த புத்தகத்தை எனக்கு வாங்கி அனுப்பியதற்கு

புத்தகத்தைப் பற்றி
தலைப்பு – தண்ணீர்
நாவல்
எழுத்து – அசோகமித்திரன்
பதிப்பகம்- நற்றினை
முதல் பதிப்பு – டிசம்பர் 1973

82 வயது ஆகி விட்டதாம் அசோகமித்திரன் அவர்களுக்கு. இந்த நாவல் அவர் 42 வருடங்கள் முன்பு எழுதியது என்பதே என்னால் நம்ப முடியவில்லை... நான் மிகவும் பின்தங்கி இருப்பது போல உணர்ந்தேன் ஒரு கட்டத்தில். முதிர்ச்சியின் எழுத்து நடை என்பது மட்டும் தெளிய தெரிந்தது புத்தகத்தைப் படித்த பொழுது, அவரின் புத்தக வரிசையில் நான் படித்த முதல் புத்தகம்... இனி அவருடைய மற்ற புத்தகம் எல்லாம் படிக்க மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்.. கிஷோரிடம் கேட்டு இருக்கிறேன் இவருடைய மற்ற படைப்புகளை.

ஜமுனா, தண்ணீர்,சாயா, டீச்சர் அம்மா,பாஸ்கர் ராவ் இவர்களுக்குள் நடப்பது...
கனத்து போனது மனசு சில பக்கங்களை திருப்பும் பொழுது, ஆனால் மிக நேர்த்தியாக கையாண்ட ஒரு கதை., தண்ணீர் -க்கு இப்பையும் தான் போராடுறோம்.

மகத்தான நாவல் வரிசை என்றே எழுதி இருந்தது இந்த புத்தகத்தின் அட்டையில் உண்மை தான்.
மற்றும் ஒரு புத்தகம் படித்து எழுத வேண்டும் என்றே நினைத்தேன். ஆனால் அப்புத்தகம் கொஞ்சம் என்னைச் சலன படுத்தியது முதல் பக்கத்திலே. அப்படி என்ன புத்தகம் என்று நீங்கள் கேட்டால்.. புத்தகத்தின் பெயர் "ம்" எழுதியது ஷோபா சக்தி.. தமிழீழ மக்களைப் பற்றியது படிக்கக் கொஞ்சம் காலம் வேண்டும் எழுத அதை விடக் கொஞ்சம் அதிகமாகவே காலம் வேண்டும் அதனால் அடுத்த போஸ்டில் அந்தப் புத்தகத்தைப் பற்றி எழுதலாம் என நினைத்தேன்.

ஸ்மார்ட் போனில்


சுஜாதாவின் சில சிறுகதைகள் படித்தேன்.. முழுமையான அறிவியல் வழி கல்வி போல தோன்றியது அவ்வபோது :)

காளீஸ்வரன் அவரிடம் இருந்து சில வண்ணதாசன் புத்தகங்களை எதிர்பார்த்து  இருக்கிறேன் கூடிய விரைவில் வண்ணதாசன் புத்தகங்களைப் பற்றி எழுத முனைவேன். வண்ணதாசன் என்ற எழுத்தாளரை எனக்கு அறிமுகப் படுத்தியது கிருஷ்ணா... யார் அந்தக் கிருஷ்ணா என்றால் இவர் தான். :)

மேலும் கடிதம் எழுத ஆரம்பித்து இருக்கிறேன்...அதுவும் கை பட... மையிட்ட பேனாவால்!

மீண்டும் சிந்திப்போம் விரைவில் :)


Saturday, February 7, 2015

புருனோவும் நானும்

ஆமா-ங்க... இங்குட்டு எல்லாம் வந்தே பல வருஷம் ஆகுது... மழையா வெயிலா எதுவா இருந்தாலும் இங்குட்டு ஒதுங்குறதே இல்ல...
ஆனா இப்போ பாருங்க இந்த முகநூல்-ல “Infinite Days Of Freedom” போட்டதால இங்க ஒரே கேள்வி மேல கேள்வி... ஆமா நீ தான் முகநூல்-ல இல்ல தானே பின்ன என்ன பண்ற. சரி எதுக்கு நம்ம வெளிய வந்தோம்-னு யோசிக்க கூட எனக்கு நேரம் இல்ல. சென்னை புத்தக கண்காட்சி 2015 நண்பர்கள் எல்லாரும் அவ்வளவு புத்தகம் வாங்கி அனுப்பி இருந்தாங்க... என்னவோ தெரியல எல்லாம் என் கைக்கு உடனே வந்து சேர்ந்துருச்சு. போன வருஷம் மீனாக்ஸ் புக் ரீடிங் காண்டெஸ்ட் இருந்துது பச்ச்... வருத்தம் ஒரு புக் கூட ஒழுங்கா படிச்சு முடிக்க முடியல-னு ஆனா இந்த வருஷம் அதுக்கு இடம் இல்லாம பண்ணும்-னு ஒரு எண்ணம். அதுக்கு தான் முகநூலில் இருந்து வெளியில் வந்தது.
கோதை (சார்ட்டா கோ) வாங்கி அனுப்பிய "புத்தனாவது சுலபம்" இந்த புத்தகம் தான் நம்ம சென்னை ஆஹா இல்ல இப்போ கோவை-க்கு இடம் மாறிய நஸ்ருதீன் ஷா அலைஸ் ஷா அவர்கிட்ட குடுத்து விட்டாங்க. இந்த புக் தான் ஜனவரி இரண்டாம் வாரம் (Jan 13th) கையில் கிடைத்தது. இந்த புக் எனக்கு யாரும் சஜஸ்ட் பண்ணல ஆனா படிக்கணும்-னு தோனுச்சு Lucifer J violet-ன் குட் ரீட்ஸ் லிஸ்ட்-ல் பார்த்தவுடன்.
புத்தகத்தை பற்றி
தலைப்பு - புத்தனாவது சுலபம்
சிறுகதைகள்
எழுத்து - எஸ்.ராமகிருஷ்ணன்
பதிப்பகம்- உயிர்மை
முதல் பதிப்பு - டிசம்பர் 2011
புத்தகம் அச்சிட்டு 3 வருடங்கள் முடிந்த பின் படிக்கிறோமே என்ற எண்ணமே வரவில்லை... அந்த புத்தகத்தின் அட்டையில் இருக்கும் புத்தன் முகம் போதும் என்றே மனம் சொல்லியது.
பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க-னு இந்த புக் தந்து சொல்லாம்... :)
ஆமாங்க பதினாறு சிறுகதை இருக்கு இந்த புத்தகத்து-ல.
1.இரண்டு குமிழ்கள்
- நிர்மலா - சபினா, இவர்களுக்கு இடையில் நடப்பதே இரண்டு குமிழ்கள். சபினாவின் மீது குற்றம் இருந்தாலும் ஒரு கருணை சுரக்கிறது நமக்கும் நிர்மலாவுக்கும் (போலீஸ் கான்ஸ்டபிள்)
2.புத்தனாவது சுலபம்
-    அருண், அருணின் அப்பா இவர்களுக்கு இடையில் நடப்பது சுவாரசியம் மிகுந்தது. ம்ம்ம்ம் 7ஜி படத்தில் வருவது போல அவ்வளவு உணர்ச்சிபூர்வமானது. படத்தில் பார்த்து நான் உணர்ச்சியடைந்தது வேறு படித்த போது வந்த உணர்வுகள் வேறு.
//பைக் ஓட்டுனா தப்பா?
பைக் ஓட்டுவது தப்பா என்ற கேள்விக்கு இன்றைக்கும் என்னிடம் சரியான பதில் இல்லை.
ஆனால் எனது உள்மனது தப்பு என்று சொல்கிறது. காரணம், பைக் என்பது ஒரு வாகனமில்லை. அது ஒரு சுதந்திரம். அது ஒரு சாகசம். அப்பாவுக்கும் மகனுக்குமான இடைவெளியை அதிகப்படுத்தும் ஒரு சாதனம். அப்பாவைச் சீண்டி விளையாட மகன் கண்டுபிடித்த ஒரு தந்திரம்.//
உண்மையான வரிகள்!
நச் - அருணின் அப்பா கண் வழியாக
// " இந்த உலகில் காதலைத் தவிர வேறு எதற்காகவாவது பையன்கள் இப்படி உருகி உருகிக் கதறுவார்களா என்ன. அப்படி என்ன இருக்கிறது காதலில்.
இந்த உலகில் காதலைப்பற்றி மிதமிஞ்சிய பொய்கள் நிரம்பியிருக்கின்றன. ஒவ்வொரு தலைமுறையும் அந்தப் பொய்களை வளர்த்தெடுப்பதில் தனது பெரும்பங்கை அளிக்கிறது. பெண்கள் எல்லாம் ஏதோ வேற்றுக்கிரகத்தில் இருந்து வந்தவர்கள் என்பதுபோல எதற்காக எவ்வளவு வியப்பு. பிரமிப்பு.
இந்த பயல்களை ஒரு நாள் பிரசவ விடுதிக்குள் கொண்டு போய் விட்டுவந்தால் இந்த மொத்த மயக்கமும் தெளிந்துபோய் விடும் என்று தோன்றுகிறது.
3.பெண் என்று எவருமில்லை
- டாக்டர் ராபி, பெயரில்லாத ஒருவன், கடல், அவள் இவர்கள் எல்லாம் யார் என்று தெரிந்துக் கொள்ளும் முன். கடல் ஆளுமையாக மாறி நம்மை உள்ளே இழுத்து விடுகிறது.
//ராபி சொல்லும் சில விஷயம்
கற்பனைதான் மனிதனின் எல்லா பயங்களுக்கும் காரணம். அனால் அதை விலக்கவே முடியாது. கற்பனையால்தான் மனித ஆசைகள் தோன்றுகின்றன. விருத்தியடைகின்றன. மனிதர்கள் நிறைய ஆசைப்படுகிறார்கள்.குறைவாகவே அடைய முயற்சிக்கிறார்கள். அதுதான் முக்கியப் பிரச்சினை.
கற்பனைதான் எல்லா செயல்களுக்கும் மூலவிதை. இனி நீ ஷேக்ஸ்பியரின் நாடகத்தில் வரும் லேடி மேக்பெத்தைப் போல குற்றவுணர்ச்சி தாங்காமல் உன் கையில் இருந்து மறையாத ஒரு துளி ரத்தத்தைக் கழுவிக்கொண்டேயிருக்க வேண்டியதுதான்.
நண்பா, நீ ஒரு மரக்கட்டை, மரக்கட்டைகளால் கடலினுள் மூழ்கிவிட முடியாது. அது கரைக்கும் கடலுக்குமாக அலைக்கழிக்கப்பட்டுக்கொண்டேதானிருக்கும்.
4.ஆம் புருனோ, அவர்கள் குற்றவாளிகளே
-    உண்மையான கதை ம்ம்ம் இவரை பற்றி தான் “http://en.wikipedia.org/wiki/Giordano_Bruno“
என்ன சொல்வது என்றே தெரியவில்லை. என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவரை புருனோ-வாக பாவித்துக்கொள்ளும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியது இந்த சிறுகதை. இந்த சிறுகதையில் இருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் குறிப்பிடப்படவேண்டும் :)
48-ஆம் பக்கத்தில் இருந்து 63-னாவது பக்கம் வரை மட்டும்மல்லாமல் நம் வாழ் நாள் முழுவதும் நினைக்க வைக்கிறது புருனோ-வின் வரலாறும் எஸ்.ரா-வின் எழுத்து நடையும்.
5.சீட்டாட்டம்
-    சீட்டாடுவது எனக்கு பிடித்த விளையாட்டு தான், ஆனால் இந்த சிறுகதையில் வரும் சீட்டாட்டம் ஒரு பிரம்மிப்பு, விசித்திரம்.
//சில சமயம் கற்பனையை விட உண்மை விசித்திரமாகவே இருக்கும்.
20 யூகங்கள் - மூவர் இடையே நடப்பது
என்ன ஒரு எழுத்து நடை என்ன ஒரு கற்பனை படிக்க படிக்க சலிக்காதது. முடிவு என்பதும் ஓர் விசித்திரமே.
6.ஜன்னலைத் தட்டாதே அஷ்ரப்
-    மற்றும் ஒரு நெருங்கிய நண்பரை அஷ்ரப்பாக பாவித்து கொண்டுவிட்டேன் இந்த சிறுகதையை படித்து முடித்த பின்
மணி அண்ணனுக்கும் அஷ்ரப்-க்கும் இடையில் நடப்பது
சிறுகதையின் இறுதி பத்தியில் "மழை வெறித்திருந்தது. அஷ்ரப் வெளியே சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த மணம் வந்தபடியே இருந்தது. மழைக்குப் பிந்தைய புழுக்கத்திற்குள்ளாகக் கிடந்தபடியே அஷ்ரப்பைப் பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன்.
அஷ்ரப்பாக வாழ்வது கடினம்.
அஷ்ரப்பை யாராலும் விளக்கவே முடியாது.
காரணம், நாம் ஒவ்வொருவரும் அஷ்ரப்பாக நடந்துகொள்ள விரும்புகிறோம். அதற்கான தைரியம் நம்மிடமில்லை. அவன் நமது ஆசைகளின் செயல்வடிவம்.
யோசனை கரைந்து உறங்கியிருந்தேன். விடிந்து எழுந்து பார்த்தபோது கிணற்றடி சுத்தமாக இருந்தது. துணி துவைக்கும் கல்லில் படிந்த அழுக்குகள் மறைந்து போயிருந்தன. தென்னை மரத்திற்குத் தண்ணீர் ஊற்றியிருக்கிறான்.
தொங்கிக்கொண்டிருந்த துணி காயப்போடும் கொடியை இழுத்துக் கட்டியிருக்கிறான். சேறு படிந்து கிடந்த எனது செருப்புகூட கழுவி சுத்தமாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தண்ணீர் இறைக்கும் வாளியை மட்டும் திருடிக்கொண்டு போய்விட்டிருக்கிறான் அதுதான் அஷ்ரப்."
7.பொய்த்தொண்டை
-    வைத்தி அண்ணன், முருகனின் நண்பன், சாரங்கா மற்றும் சிலர்
இப்படியும் ஒரு வாழ்க்கை இப்படியும் ஒருவர் என்று நம் வாழ்வில் சில வைத்தி அண்ணன்கள்... பல சாரங்காக்கள். :)
8.நடுவில் உள்ளவள்
-    சியாமளா மற்றும் அக்கா தம்பி.
உண்மை தான் இது, பலர் வீட்டில் நடப்பது இன்று நேற்று அல்ல எப்போதும்.
மனசு வருத்தமா இருந்தது.
9.ஜெயந்திக்கு ஞாயிற்றுகிழமை பிடிப்பதில்லை
-    ஜெயந்தி அருண் இவர்களின் கதை.
இதை படித்தவுடன் எனக்கான கதை என்றே நினைத்துக்கொண்டேன். நானும் சைவம் சாப்பிட்டு வாழும் உயிரினம் ஆதலால் அப்படி ஓர் எண்ணம் இந்த கதையை படிக்கும் பொழுது. ஆனா எனக்கு அப்படி எல்லாம் ஆகாது என்ற நம்பிக்கை. நம்பிக்கை தானே வாழ்க்கை ;)
10. யட்சன் தனித்திருக்கிறான்
-    ஊர்மிளாவும் அம்மாவும்
உண்மை உண்மை அத்தனையும் உண்மை இதே போல பல முறை தோன்றி இருக்கிறது எனக்கு. நானும் ஒரு ஊர்மிளா ஆகிவிடுவேனோ என்ற பயம் எனக்குள் இருக்கிறது, இருந்தாலும் ஒரு யட்சனையும் எனக்குள் வரவிடாமல் பார்த்துக்கொள்வேன்.
11. சொர்ணத்து ஆச்சிக்கு மன்மோகன்சிங்கைப் பிடிக்காது
-    இது ஒரு கற்பனை கதை போலவே தோன்றியது. ஆனால் இப்படியும் சில மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதும் உண்மை.
12. பேசும் கற்கள்
-    உண்மையாகவே அப்படி ஒரு கல் இருப்பின் நாம் அதை கண்டு வியப்போம் ஆனால் மன்னரை போல அதை துன்புறுத்தி இருக்கமாட்டோம் என்றே தோன்றியது.
13. சிறுமீன் (குறுங்கதை)
-    சிருமீன்களும் கொக்கும்
மீன் - கொக்கிடம் சொன்னது
"கொக்கே... வானத்தில் பறக்கின்ற பறவைகள் என்றாலே உன்னதமானவை என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அனால் எளிய உயிர்களைக் கொன்று தின்னும் அற்பங்கள்கூட வானில் பறக்கின்றன என்று உன்னைப் பார்த்த பிறகுதான் அறிந்து கொண்டேன்.
ஒற்றைகாலில் நிற்பதால் நீ துறவியுமில்லை. வெண்ணிறமாக இருப்பதால் நீ தூய்மையானவனுமில்லை. தோற்றத்தைப் பார்த்து உன்னை அமைதியின் உருவம் என நம்புபவர்கள் முட்டாள்கள். உன்னிடம் சிக்கி உயிரை இழப்பதை விட நானாகச் செத்துமடிவது மேல். ஒன்றை நினைவில் வைத்துக் கொள். எந்தக் கொக்கும் வயதாகி தானாகச் செத்துப் போவதில்லை. எவராலோ கொல்லப்படத்தான் போகின்றன" என்றபடி வீழ்ந்து இறந்தது சிறுமீன்
14. சொந்தக்குரல்
-    அம்மாவும் பிள்ளையும்
அம்மாக்களின் உலகத்தில் தான் எத்தனை எதிர்பார்ப்பு
தந்தைகளின் உலகத்தில் தான் எத்தனை எதிர்ப்புகள் அம்மாக்களை நோக்கி.
கதை பற்றிய சிறுகதை ஒரு அம்மாவின் பார்வையில்
15. சிற்றறிவு
-    மகாராணியும் ஒலிவாராவும்
மகாராணி சொல்லியது போல எல்லா விதமான கண்டுபிடிப்புகளும் ஒரே விதமாக இயற்கையை நம்மிடம் இருந்து பறித்து கொள்(ல்)கிறது அறியாமலே நாமும் அதை வரவேற்கிறோம் என்றே எனக்கும் தோன்றுகிறது.
16. கோகிலவாணியை யாருக்கும் நினைவிருக்காது
-    கோகிலவாணி அவள் வாழ்க்கை
மனசு கனத்து போனது இந்த சிறுகதையை படித்து முடிக்கும் போது. ஒரு காரணம் கோகிலவாணி, மற்றொரு காரணம் புத்தகம் முடிந்து விட்டதே என்று.
2015- ல் முதல் புத்தகம் படித்து முடித்துவிட்டேன் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கிறது அந்த தருணத்திலேயே உங்களுக்கு அந்த புத்தகத்தை பற்றி சொல்லவேண்டும் என்ற எண்ணமும் வந்தது அதனால் தான் இந்த போஸ்ட் எழுதிவிட்டு அடுத்த புத்தகத்தை எடுப்போம் என்று காத்துக்கொண்டிருந்தேன்.
:) எப்படி சும்மா இருக்க முடியும் இது தான் காதலின் மாதம்.
காடுகளில் காவலன் இல்லை
காவல் தெய்வமே காதலாக உருவெடுத்தப் பின்
காதலாகி நாம் காதலை காதலிப்போம்.
மீண்டும் சிந்திப்போம் விரைவில் :)