Saturday, February 7, 2015

புருனோவும் நானும்

ஆமா-ங்க... இங்குட்டு எல்லாம் வந்தே பல வருஷம் ஆகுது... மழையா வெயிலா எதுவா இருந்தாலும் இங்குட்டு ஒதுங்குறதே இல்ல...
ஆனா இப்போ பாருங்க இந்த முகநூல்-ல “Infinite Days Of Freedom” போட்டதால இங்க ஒரே கேள்வி மேல கேள்வி... ஆமா நீ தான் முகநூல்-ல இல்ல தானே பின்ன என்ன பண்ற. சரி எதுக்கு நம்ம வெளிய வந்தோம்-னு யோசிக்க கூட எனக்கு நேரம் இல்ல. சென்னை புத்தக கண்காட்சி 2015 நண்பர்கள் எல்லாரும் அவ்வளவு புத்தகம் வாங்கி அனுப்பி இருந்தாங்க... என்னவோ தெரியல எல்லாம் என் கைக்கு உடனே வந்து சேர்ந்துருச்சு. போன வருஷம் மீனாக்ஸ் புக் ரீடிங் காண்டெஸ்ட் இருந்துது பச்ச்... வருத்தம் ஒரு புக் கூட ஒழுங்கா படிச்சு முடிக்க முடியல-னு ஆனா இந்த வருஷம் அதுக்கு இடம் இல்லாம பண்ணும்-னு ஒரு எண்ணம். அதுக்கு தான் முகநூலில் இருந்து வெளியில் வந்தது.
கோதை (சார்ட்டா கோ) வாங்கி அனுப்பிய "புத்தனாவது சுலபம்" இந்த புத்தகம் தான் நம்ம சென்னை ஆஹா இல்ல இப்போ கோவை-க்கு இடம் மாறிய நஸ்ருதீன் ஷா அலைஸ் ஷா அவர்கிட்ட குடுத்து விட்டாங்க. இந்த புக் தான் ஜனவரி இரண்டாம் வாரம் (Jan 13th) கையில் கிடைத்தது. இந்த புக் எனக்கு யாரும் சஜஸ்ட் பண்ணல ஆனா படிக்கணும்-னு தோனுச்சு Lucifer J violet-ன் குட் ரீட்ஸ் லிஸ்ட்-ல் பார்த்தவுடன்.
புத்தகத்தை பற்றி
தலைப்பு - புத்தனாவது சுலபம்
சிறுகதைகள்
எழுத்து - எஸ்.ராமகிருஷ்ணன்
பதிப்பகம்- உயிர்மை
முதல் பதிப்பு - டிசம்பர் 2011
புத்தகம் அச்சிட்டு 3 வருடங்கள் முடிந்த பின் படிக்கிறோமே என்ற எண்ணமே வரவில்லை... அந்த புத்தகத்தின் அட்டையில் இருக்கும் புத்தன் முகம் போதும் என்றே மனம் சொல்லியது.
பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க-னு இந்த புக் தந்து சொல்லாம்... :)
ஆமாங்க பதினாறு சிறுகதை இருக்கு இந்த புத்தகத்து-ல.
1.இரண்டு குமிழ்கள்
- நிர்மலா - சபினா, இவர்களுக்கு இடையில் நடப்பதே இரண்டு குமிழ்கள். சபினாவின் மீது குற்றம் இருந்தாலும் ஒரு கருணை சுரக்கிறது நமக்கும் நிர்மலாவுக்கும் (போலீஸ் கான்ஸ்டபிள்)
2.புத்தனாவது சுலபம்
-    அருண், அருணின் அப்பா இவர்களுக்கு இடையில் நடப்பது சுவாரசியம் மிகுந்தது. ம்ம்ம்ம் 7ஜி படத்தில் வருவது போல அவ்வளவு உணர்ச்சிபூர்வமானது. படத்தில் பார்த்து நான் உணர்ச்சியடைந்தது வேறு படித்த போது வந்த உணர்வுகள் வேறு.
//பைக் ஓட்டுனா தப்பா?
பைக் ஓட்டுவது தப்பா என்ற கேள்விக்கு இன்றைக்கும் என்னிடம் சரியான பதில் இல்லை.
ஆனால் எனது உள்மனது தப்பு என்று சொல்கிறது. காரணம், பைக் என்பது ஒரு வாகனமில்லை. அது ஒரு சுதந்திரம். அது ஒரு சாகசம். அப்பாவுக்கும் மகனுக்குமான இடைவெளியை அதிகப்படுத்தும் ஒரு சாதனம். அப்பாவைச் சீண்டி விளையாட மகன் கண்டுபிடித்த ஒரு தந்திரம்.//
உண்மையான வரிகள்!
நச் - அருணின் அப்பா கண் வழியாக
// " இந்த உலகில் காதலைத் தவிர வேறு எதற்காகவாவது பையன்கள் இப்படி உருகி உருகிக் கதறுவார்களா என்ன. அப்படி என்ன இருக்கிறது காதலில்.
இந்த உலகில் காதலைப்பற்றி மிதமிஞ்சிய பொய்கள் நிரம்பியிருக்கின்றன. ஒவ்வொரு தலைமுறையும் அந்தப் பொய்களை வளர்த்தெடுப்பதில் தனது பெரும்பங்கை அளிக்கிறது. பெண்கள் எல்லாம் ஏதோ வேற்றுக்கிரகத்தில் இருந்து வந்தவர்கள் என்பதுபோல எதற்காக எவ்வளவு வியப்பு. பிரமிப்பு.
இந்த பயல்களை ஒரு நாள் பிரசவ விடுதிக்குள் கொண்டு போய் விட்டுவந்தால் இந்த மொத்த மயக்கமும் தெளிந்துபோய் விடும் என்று தோன்றுகிறது.
3.பெண் என்று எவருமில்லை
- டாக்டர் ராபி, பெயரில்லாத ஒருவன், கடல், அவள் இவர்கள் எல்லாம் யார் என்று தெரிந்துக் கொள்ளும் முன். கடல் ஆளுமையாக மாறி நம்மை உள்ளே இழுத்து விடுகிறது.
//ராபி சொல்லும் சில விஷயம்
கற்பனைதான் மனிதனின் எல்லா பயங்களுக்கும் காரணம். அனால் அதை விலக்கவே முடியாது. கற்பனையால்தான் மனித ஆசைகள் தோன்றுகின்றன. விருத்தியடைகின்றன. மனிதர்கள் நிறைய ஆசைப்படுகிறார்கள்.குறைவாகவே அடைய முயற்சிக்கிறார்கள். அதுதான் முக்கியப் பிரச்சினை.
கற்பனைதான் எல்லா செயல்களுக்கும் மூலவிதை. இனி நீ ஷேக்ஸ்பியரின் நாடகத்தில் வரும் லேடி மேக்பெத்தைப் போல குற்றவுணர்ச்சி தாங்காமல் உன் கையில் இருந்து மறையாத ஒரு துளி ரத்தத்தைக் கழுவிக்கொண்டேயிருக்க வேண்டியதுதான்.
நண்பா, நீ ஒரு மரக்கட்டை, மரக்கட்டைகளால் கடலினுள் மூழ்கிவிட முடியாது. அது கரைக்கும் கடலுக்குமாக அலைக்கழிக்கப்பட்டுக்கொண்டேதானிருக்கும்.
4.ஆம் புருனோ, அவர்கள் குற்றவாளிகளே
-    உண்மையான கதை ம்ம்ம் இவரை பற்றி தான் “http://en.wikipedia.org/wiki/Giordano_Bruno“
என்ன சொல்வது என்றே தெரியவில்லை. என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவரை புருனோ-வாக பாவித்துக்கொள்ளும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியது இந்த சிறுகதை. இந்த சிறுகதையில் இருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் குறிப்பிடப்படவேண்டும் :)
48-ஆம் பக்கத்தில் இருந்து 63-னாவது பக்கம் வரை மட்டும்மல்லாமல் நம் வாழ் நாள் முழுவதும் நினைக்க வைக்கிறது புருனோ-வின் வரலாறும் எஸ்.ரா-வின் எழுத்து நடையும்.
5.சீட்டாட்டம்
-    சீட்டாடுவது எனக்கு பிடித்த விளையாட்டு தான், ஆனால் இந்த சிறுகதையில் வரும் சீட்டாட்டம் ஒரு பிரம்மிப்பு, விசித்திரம்.
//சில சமயம் கற்பனையை விட உண்மை விசித்திரமாகவே இருக்கும்.
20 யூகங்கள் - மூவர் இடையே நடப்பது
என்ன ஒரு எழுத்து நடை என்ன ஒரு கற்பனை படிக்க படிக்க சலிக்காதது. முடிவு என்பதும் ஓர் விசித்திரமே.
6.ஜன்னலைத் தட்டாதே அஷ்ரப்
-    மற்றும் ஒரு நெருங்கிய நண்பரை அஷ்ரப்பாக பாவித்து கொண்டுவிட்டேன் இந்த சிறுகதையை படித்து முடித்த பின்
மணி அண்ணனுக்கும் அஷ்ரப்-க்கும் இடையில் நடப்பது
சிறுகதையின் இறுதி பத்தியில் "மழை வெறித்திருந்தது. அஷ்ரப் வெளியே சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த மணம் வந்தபடியே இருந்தது. மழைக்குப் பிந்தைய புழுக்கத்திற்குள்ளாகக் கிடந்தபடியே அஷ்ரப்பைப் பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன்.
அஷ்ரப்பாக வாழ்வது கடினம்.
அஷ்ரப்பை யாராலும் விளக்கவே முடியாது.
காரணம், நாம் ஒவ்வொருவரும் அஷ்ரப்பாக நடந்துகொள்ள விரும்புகிறோம். அதற்கான தைரியம் நம்மிடமில்லை. அவன் நமது ஆசைகளின் செயல்வடிவம்.
யோசனை கரைந்து உறங்கியிருந்தேன். விடிந்து எழுந்து பார்த்தபோது கிணற்றடி சுத்தமாக இருந்தது. துணி துவைக்கும் கல்லில் படிந்த அழுக்குகள் மறைந்து போயிருந்தன. தென்னை மரத்திற்குத் தண்ணீர் ஊற்றியிருக்கிறான்.
தொங்கிக்கொண்டிருந்த துணி காயப்போடும் கொடியை இழுத்துக் கட்டியிருக்கிறான். சேறு படிந்து கிடந்த எனது செருப்புகூட கழுவி சுத்தமாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தண்ணீர் இறைக்கும் வாளியை மட்டும் திருடிக்கொண்டு போய்விட்டிருக்கிறான் அதுதான் அஷ்ரப்."
7.பொய்த்தொண்டை
-    வைத்தி அண்ணன், முருகனின் நண்பன், சாரங்கா மற்றும் சிலர்
இப்படியும் ஒரு வாழ்க்கை இப்படியும் ஒருவர் என்று நம் வாழ்வில் சில வைத்தி அண்ணன்கள்... பல சாரங்காக்கள். :)
8.நடுவில் உள்ளவள்
-    சியாமளா மற்றும் அக்கா தம்பி.
உண்மை தான் இது, பலர் வீட்டில் நடப்பது இன்று நேற்று அல்ல எப்போதும்.
மனசு வருத்தமா இருந்தது.
9.ஜெயந்திக்கு ஞாயிற்றுகிழமை பிடிப்பதில்லை
-    ஜெயந்தி அருண் இவர்களின் கதை.
இதை படித்தவுடன் எனக்கான கதை என்றே நினைத்துக்கொண்டேன். நானும் சைவம் சாப்பிட்டு வாழும் உயிரினம் ஆதலால் அப்படி ஓர் எண்ணம் இந்த கதையை படிக்கும் பொழுது. ஆனா எனக்கு அப்படி எல்லாம் ஆகாது என்ற நம்பிக்கை. நம்பிக்கை தானே வாழ்க்கை ;)
10. யட்சன் தனித்திருக்கிறான்
-    ஊர்மிளாவும் அம்மாவும்
உண்மை உண்மை அத்தனையும் உண்மை இதே போல பல முறை தோன்றி இருக்கிறது எனக்கு. நானும் ஒரு ஊர்மிளா ஆகிவிடுவேனோ என்ற பயம் எனக்குள் இருக்கிறது, இருந்தாலும் ஒரு யட்சனையும் எனக்குள் வரவிடாமல் பார்த்துக்கொள்வேன்.
11. சொர்ணத்து ஆச்சிக்கு மன்மோகன்சிங்கைப் பிடிக்காது
-    இது ஒரு கற்பனை கதை போலவே தோன்றியது. ஆனால் இப்படியும் சில மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதும் உண்மை.
12. பேசும் கற்கள்
-    உண்மையாகவே அப்படி ஒரு கல் இருப்பின் நாம் அதை கண்டு வியப்போம் ஆனால் மன்னரை போல அதை துன்புறுத்தி இருக்கமாட்டோம் என்றே தோன்றியது.
13. சிறுமீன் (குறுங்கதை)
-    சிருமீன்களும் கொக்கும்
மீன் - கொக்கிடம் சொன்னது
"கொக்கே... வானத்தில் பறக்கின்ற பறவைகள் என்றாலே உன்னதமானவை என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அனால் எளிய உயிர்களைக் கொன்று தின்னும் அற்பங்கள்கூட வானில் பறக்கின்றன என்று உன்னைப் பார்த்த பிறகுதான் அறிந்து கொண்டேன்.
ஒற்றைகாலில் நிற்பதால் நீ துறவியுமில்லை. வெண்ணிறமாக இருப்பதால் நீ தூய்மையானவனுமில்லை. தோற்றத்தைப் பார்த்து உன்னை அமைதியின் உருவம் என நம்புபவர்கள் முட்டாள்கள். உன்னிடம் சிக்கி உயிரை இழப்பதை விட நானாகச் செத்துமடிவது மேல். ஒன்றை நினைவில் வைத்துக் கொள். எந்தக் கொக்கும் வயதாகி தானாகச் செத்துப் போவதில்லை. எவராலோ கொல்லப்படத்தான் போகின்றன" என்றபடி வீழ்ந்து இறந்தது சிறுமீன்
14. சொந்தக்குரல்
-    அம்மாவும் பிள்ளையும்
அம்மாக்களின் உலகத்தில் தான் எத்தனை எதிர்பார்ப்பு
தந்தைகளின் உலகத்தில் தான் எத்தனை எதிர்ப்புகள் அம்மாக்களை நோக்கி.
கதை பற்றிய சிறுகதை ஒரு அம்மாவின் பார்வையில்
15. சிற்றறிவு
-    மகாராணியும் ஒலிவாராவும்
மகாராணி சொல்லியது போல எல்லா விதமான கண்டுபிடிப்புகளும் ஒரே விதமாக இயற்கையை நம்மிடம் இருந்து பறித்து கொள்(ல்)கிறது அறியாமலே நாமும் அதை வரவேற்கிறோம் என்றே எனக்கும் தோன்றுகிறது.
16. கோகிலவாணியை யாருக்கும் நினைவிருக்காது
-    கோகிலவாணி அவள் வாழ்க்கை
மனசு கனத்து போனது இந்த சிறுகதையை படித்து முடிக்கும் போது. ஒரு காரணம் கோகிலவாணி, மற்றொரு காரணம் புத்தகம் முடிந்து விட்டதே என்று.
2015- ல் முதல் புத்தகம் படித்து முடித்துவிட்டேன் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கிறது அந்த தருணத்திலேயே உங்களுக்கு அந்த புத்தகத்தை பற்றி சொல்லவேண்டும் என்ற எண்ணமும் வந்தது அதனால் தான் இந்த போஸ்ட் எழுதிவிட்டு அடுத்த புத்தகத்தை எடுப்போம் என்று காத்துக்கொண்டிருந்தேன்.
:) எப்படி சும்மா இருக்க முடியும் இது தான் காதலின் மாதம்.
காடுகளில் காவலன் இல்லை
காவல் தெய்வமே காதலாக உருவெடுத்தப் பின்
காதலாகி நாம் காதலை காதலிப்போம்.
மீண்டும் சிந்திப்போம் விரைவில் :)

No comments:

Post a Comment